Pages

Monday, 21 January 2013

பட்டாம்பூச்சி


அவன்  அந்த சைட் -யை விட்டு கிளம்பும்போது சூரியன் அவனின் தலைக்கு மேல் இருந்தது .
அவன் பொங்கலுக்கு தன் ஊருக்கு சென்று மீண்டும் வேலையில் சேர்ந்து இரண்டு நாட்கள் தான் ஆகிருந்தது .
தாராபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் மேற்கில் அவனது சைட் .
வேலை நிமர்த்தமாக அவன் அங்கிருந்து தாராபுரம் வழியாக கிழக்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு சைட்-யை காண வந்திருந்தான் .
பல்வேறு சைட்-களை பார்ப்பது என்பது அவனின் நான்கு மாத பணியில் பழகிப்போனதுதான் என்றாலும் ஒரே நாளில் இங்கும் அங்குமாக 100 கிலோமீட்டர் தொலைவு பைக் பயணம் புதிதுதான் .. 
அந்த பைக்-க்கு அது சாதாரணமாக விஷயம் என்று  நினைக்க தோன்றினாலும் ( சைடு மிரர் , இண்டிகட்டர் , ஹோர்ன் கிடையாது.. இவனை தவிர யார் உதைத்தாலும் முதல் தடவையில் கிளம்பாது  )அது ஓடுவதே அசாதாரமானது என்பதே அவன் முடிவு .

பெரும்பாலும் இவன் பயணிக்கும் அந்த பிரதான காட்டு வழி தார் சாலைகளில் முன்னும் பின்னும் சில மைல் தொலைவில் ஏதாவது ஒரு வாகனம் வந்துக்கொண்டுதான் இருக்கும் என்பது அவதானிப்பு.
கிளிஞ்சல்களை கொண்டு ஊதி விளையாடும் குழந்தையை போல கானல் நீரை பைக்-யை கொண்டு கிழித்து விளையாடிக்கொண்டே சென்றுக்கொண்டிருந்த பொழுதில் சற்றும் எதிர்பார்க்காத விதமாய் நிகழ்ந்தது அந்த விபத்து ..
எங்கிருந்தோ வந்த அந்த பட்டாம்பூச்சி அவனின் வலக்கையின் மீது மோதியது .
அது ஒரு கரும் மஞ்சள் நிறம் கொண்ட பட்டாம்பூச்சி . பொதுவாக அவன் கண்ட பட்டாம்பூச்சிகளில் பத்தில் ஏழு கரும் மஞ்சள் நிறம் கொண்டதாகத்தான் இருக்கும் . 
அது இடித்த பதற்றத்தில் வேகம் குறைத்த அவன் தன் வலது கை சற்று பலவீனமானது போல் உணர்ந்தான் . தொடர்ந்து வண்டி ஒட்டி சென்றாலும் அந்த வலக்கையின் மீதான வலியும் கவனமும் தொடர்ந்தே வந்துக்கொண்டிருந்தது .
இடித்து சென்ற அந்த பட்டாம்பூச்சி அவனின் பயணம் முழுதும் தொடர்ந்தே வந்துக்கொண்டிருந்தது மனதில் என்பதில் அதிசயக்க ஒன்றுமில்லை .
அந்த பட்டாம்பூச்சி வெயில் தாளாமல் வந்திருக்க கூடும் என்று சாலையின் குறுக்கே வந்த தள்ளாடும் கிழவியை பார்த்ததும் நினைத்துகொண்டான் 
ஒருவேளை அது பூக்களின் வாசனை மயக்கத்தில் வந்து இடித்திருக்கலாம் , டாஸ்மாக் வாசலில் நின்றுக்கொண்டிருந்த வண்டியை இடித்த குடிகாரனை போல.
தன்னை போலவே அரைகுறையாய் பறக்க கற்ற பட்டாம்பூச்சியாக கூட இருக்கலாம் என்று வேக தடை நினைவுப்படுத்தியது .
இரவு வீடு சென்ற பிறகும் கூட அவன் கையில் எதோ ஒன்று ஊறுவது போன்றே இருந்தது ..
ஒரு வேளை அந்த பட்டாம்பூச்சி மன்னிப்பு கேட்க வந்திருக்குமோ ஒரு முறை கதவை திறந்து பார்த்தான் .. 
அங்கும் ஒரு கரும் மஞ்சள் நிறம் கொண்ட பட்டாம்பூச்சி தும்பை செடியுடன் நடனமாடிக்கொண்டுதான் இருந்தது ..

எத்தனை பட்டாம்பூச்சிகளை அடித்திருப்பேன் சிறுவயதில் என்று நினைக்கும் 
அப்பொழுது கூட வருத்தம்கொள்ளாத நான் 
என் மேல் இடித்து தன் வண்ணத்தை என்னிடம் தொலைத்து சென்ற அந்த பட்டாம்பூச்சி தொலைத்த வண்ணத்தை வண்ணத்தை மீட்டெடுக்க எந்த திசையில் அலைகிறதோ என்று எண்ணும்போது வந்து விடுகின்றது .
ஒரு வேளை உங்கள் பயணங்களில் எங்காவது வண்ணமில்லாத பட்டாம்பூச்சியை கண்டுக்கொண்டால் 
தவறாமல் சொல்லி அனுப்புங்கள் என் இதயத்தின் விலாசத்தை ......

No comments:

Post a Comment