பெரும்பாலும் அலச்சியமாகவே துவங்குகிறது அந்த பயணம்
இலக்கு என்னவோ ஏழு கிலோமீட்டர் தூரம்தான்
துவக்கத்திற்கும் முடிவுக்குமிடையே நிலவொளியும் வாகன விளக்கொளியும் மட்டுமே உடன் பயணம் செய்ய
ஊரும் வீடும் எல்லைகளிலேயே நிற்கிறது
கருவேல மரங்களும் மஞ்சள் வேலமரங்களும்
என்னிடம் பெயர்களை சொல்லி அறிமுகம் செய்யாத பல காட்டு மரங்களும் வழிமுழுவதும்
ஏதேதோ கதை பேசி காற்றடித்து சிரிக்கிறது
அன்றும் இதுபோல்தான் முதல்முதலாக இந்த சாலையில் இரவு பயணம்
காற்றலைகளோடு ஏதோ எண்ண அலைகளும் வேகமாய் வந்து செல்லும் போது
போகாமல் நின்றுகொண்டிருந்தது அந்த பாம்பு
அது என் வண்டியை மட்டுமல்லாது கனவுகளையும் சற்று நிதானம் செய்ய வற்புறுத்தியது
அதனை கடந்தவுடன் பதஞ்சலியும் குண்டலினியும் கொஞ்சம் பேசி
பின் ஒவ்வொரு அடியிலும் கவனம் வைக்க தியானமாய் மாறிப்போகிறது ஒரு சிறு பைக் பயணம்
சிறியதோ பெரியதோ மெலியதோ பருமனோ அன்று முதல் இன்று வரை
தினமும் இரவு பயணத்தில் கண்டுவிடுகிறேன் ஒரு பாம்பை
என்னை கடித்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் நானும்
தன்னை அடித்துவிட கூடாது என்ற பயத்தில் அதுவும்
நான் நேராகவும் அது செங்குத்தாகவும்
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யாமலே கடந்துவிடுகிறோம் அந்த இடத்தை ..
No comments:
Post a Comment